Tuesday, 07 February 2012 01:23
| < Prev | Next > |
|---|
கோவையைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 42 வயதான இவர் நகைப் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இத்தம்பதி இரு வீட்டாரின் கடும் எதிர்ப்புகளையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணமாகி 12 ஆண்டுளாகி விட்டன. குழந்தைகள் கிடையாது. கணவனும், மனைவியும் அப்படி ஒரு அன்னியோன்யமாக இருப்பார்களாம். இருவரும் பிரித்து யாருமே பார்த்ததில்லை. அப்படி எங்கு போனாலும் சேர்ந்தே போவார்கள்,வருவார்கள். ஒருவர் மீது ஒருவர் அன்புடனும், பாசத்துடனும் இருந்து வந்தனர்.
நேற்று காலையில் செந்தில்குமாருக்கு திடீரென நெஞ்சு வலித்துள்ளது. மனைவியிடம் அவர் நெஞ்சு வலிப்பதாக கூற பதறிப் போன கிருஷ்ணவேணி, உடனடியாக செந்தில்குமாரின் நண்பர் ராதாகிருஷ்ணன் என்பவருக்குத் தகவல் கொடுத்து வரவழைத்தார். பின்னர் இருவருமாக சேர்ந்து செந்தில்குமாரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செந்தில்குமாரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் கடும் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார் கிருஷ்ணவேணி, மருத்துவமனையிலேயே அழுது புரண்டார். பின்னர் உடலை வீட்டுக்குக் கொண்டு வந்தனர். இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது கிருஷ்ணவேணி எழுந்து அங்கிருந்து வெளியேறினார். பின்னர் தலைவிரி கோலமாக வந்த அவர் தனது கணவர் உடல் மீ்து விழுந்து கதறியழுதார். சற்று நேரத்தில் மயக்கமாகி விட்டார்.
அவர் விஷம் சாப்பிட்டிருந்தது தெரிய வந்து உறவினர்கள் மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடினர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் கிருஷ்ணவேணியின் உயிர் பிரிந்து விட்டதாக கூறினர். இதனால் உறவினர்கள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.
காதலித்து மணம் புரிந்த கணவனின் பிரிவைத் தாங்க முடியாமல் விஷம் சாப்பிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட கிருஷ்ணவேணியின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Copyright © 2009 - 2012Alagankulam friends community Privacy Policy